Wednesday, November 30, 2011

சுதந்திரம் வாங்கித் தந்தார் காந்தி, அதை விற்கிறார் சோனியா காந்தி!

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு

'பரிசுத்தமான லட்சியங்களுக்கு விரோத​மாக நமது செயல்கள் உள்ளன. உலகை மாற்ற வேண்டும் என்றால், நிறுவன அதிகார வர்க்கத்தை மாற்ற வேண்டும். சொற்ப மனிதர்கள் உலகின் தலைவிதியை நிர்ணயிக்க அனுமதிக்கக் கூடாது’ - மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதி உதவி என்ற பெயரில் அமெரிக்காவின் மிகப் பெரிய நிறுவனங்கள், அந்த நாடுகளை எவ்வாறு மீளாத கடனாளியாக... அடிமையாக மாற்றின என்பதைக் குற்ற உணர்வுடன் 'ஒரு பொருளாதார அடிமையின் வாக்குமூலம்’ புத்தகத்தில் பதிவு செய்து இருப்பார் ஜான் பெர்கின்ஸ். மத்திய அரசு எடுக்கும் முடிவுகளைப் பார்த்தால், இந்தியாவும் இப்படிச் சிக்கிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது!

சில்லறை வணிகத்தில் 51 சதவிகிதம் அன்னிய முதலீட்டை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு அலைகள். முதல்வர்கள் ஜெயலலிதா, மம்தா பானர்ஜி மட்டும் இன்றி, கேரளாவை ஆளும் காங்கிரஸ் கட்சியும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் எஃப்.டி.ஐ. சட்டத்துக்கு அகாலிதளம் தவிர கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை சந்தித்தோம். இவர், நாடாளுமன்றத்தில் எஃப்.டி.ஐ. குறித்த விசாரணை நடத்திய நிலைக் குழுத் தலைவராகவும் இருந்து அறிக்கை கொடுத்தவர்.

''இந்தக் கொள்கையை ஏற்று முதலில் அனுமதி கொடுத்தது பி.ஜே.பி. தலைமையிலான என்.டி.ஏ. ஆட்சி​தானே. இப்போது நீங்களே எதிர்ப்பது ஏன்?''

''நாங்கள் ஒற்றை பிராண்டில் 26 சதவிகிதம் கொடுத்தது உண்மை. ஆனால், அது ஒரு பரிட்சார்த்த ரீதியாகவே கொடுக்கப்பட்டது. அதில் கிடைத்த அனுபவத்துக்குப் பிறகு, இதைத் தொடர வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தோம். சிங்கிள் பிராண்ட் என்று அனுமதி வாங்கிவிட்டு, பின்னர் மல்டி பிராண்ட் வியாபாரங்களை நடத்தினார்கள். அதனால் பொதுமக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பதை அறிந்து, இதில் நேரடி அன்னிய முதலீடு தேவை இல்லை என்று 2009-ம் ஆண்டு வர்த்தகத் துறை சார்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவில் அறிக்கை கொடுத்திருக்கிறோம்.''

''இந்த அனுமதி மூலம் பணவீக்கம் கட்டுக்குள் வந்து மந்த நிலையில் இருக்கும் அன்னிய முதலீடு மேலும் அதிகரித்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய அரசு சொல்கிறதே?''

''அது உண்மை அல்ல. நம்முடைய சந்தை நிலைமையும் வேலை வாய்ப்புகளும்தான் பறிபோகும். உணவு உற்பத்தியுடன், உணவு சாராத மற்ற உற்பத்திகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நுகர்வோர்கள் துன்பத்துக்கு ஆளாகப்போகிறார்கள். வால்மார்ட், கேர் ஃபோர் போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்ட நாடுகளில், சிறு கடைக்காரர்கள், சிறு சிறு உற்பத்தியாளர்கள், மொத்தமாக நுகர்வோர்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண விவசாயிக்கு இன்றைய தினம் அரசு கொடுக்கும் குறைந்தபட்ச விலையே சரியாகப் போய்ச் சேராத நிலையில், இந்த அன்னிய கம்பெனிகள் என்ன கொடுத்துவிடுவார்கள்?''

''உள்ளூர் உற்பத்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் இருப்பது நல்லதுதானே?''

''அதைக் கண்காணிக்க முடியாது, கட்டாயமும் இல்லை. செருப்பு, தொடங்கி ஆடைகள் வரை எங்கு விலை குறைவாக கிடைக்கிறதோ, அந்த நாடுகளில் இருந்து வாங்கிவந்து இங்கே விற்பார்கள். சில்லறை வணிகம் அனுமதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் இதுதான் நடக்கிறது. இந்த ஆபத்தான சந்தை நமக்கு தேவை இல்லை. இந்த நேரடி அன்னிய முதலீடு நம்முடைய பழக்கவழக்கங்களை மாற்றும். குறிப்பாக குழந்தைகளின் மனோபாவம் மாறும். அவர்களுடைய உணவு, பழக்க வழக்கங்கள், உடை, அணிகலன்களின் எல்லாம் இந்தப் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களால் ஆதிக்கம் பெறும். மோகம் அதிகரிக்கும். இதில் எந்தப் பலனும் இல்லை என்பதுதான் உண்மை.''

இந்த சட்டத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நம்ம ஊர் ஆட்களிடம் பேசினோம்.

வெள்ளையன் தமிழ்நாடு வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர்,

''மகாத்மா காந்தி ரத்தம் சிந்தி நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். சோனியா காந்தி அதை மீண்டும் அன்னியருக்கே விற்கிறார். அன்னிய முதலீட்டுக்கு ஆதரவாக மத்திய அரசு பல்வேறு நியாயங்களை அடுக்கினாலும், அவர்கள் இங்கே கால் ஊன்றி ஏகபோகம் அடைந்த பிறகு, சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளை கிட்டத்தட்ட தங்களின் அடிமைகள் ஆக்கிவிடுவார்கள்.

சிமென்ட், மணல் விலையில் கொள்ளை அடிப்பதுபோல அன்னிய நிறுவனங்கள் சிண்டிகேட் போட்டு பொருட்களின் விலையை உயர்த்தி விடுவார்கள். ஆன்லைன் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த முடியாததுபோல் அப்போது விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் திராணி நம் தலைவர்களுக்கு இருக்காது. இதற்கு உதாரணம், கோக், பெப்ஸி போன்ற பானங்கள்தான். அவை வளர்ந்ததும், உள்ளூர்க் குளிர் பானங்கள் அனைத்துமே அழிந்துவிட்டன. நம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி புரிய அன்னிய நிறுவனங்கள் ஒன்றும் சேவை அமைப்புகள் அல்ல. அவர்கள் நம் நாட்டுக்கு கொள்ளை அடிக்கத்தான் வருகிறார்கள். சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவிப்பவன் இந்தியனே அல்ல.''

விக்கிரமராஜா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர்,

''இந்தியாவில் நேரடியாக சில்லறை வணிகத்தில் இருப்பவர்கள் ஏழு கோடிப் பேர். இவர்களைச் சார்ந்து இருப்பவர்கள் 21 கோடிப் பேர். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு சில்லறை வணிகத்தைச் சார்ந்து இருக்கிறது. ஆனால், 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. எப்படி? 28 கோடி பேரின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு 40 லட்சம் பேருக்கு அன்னியனிடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் வேலை வாய்ப்பா?

மத்திய அரசு சொல்வதுபோல, அமெரிக்கா, சீனா, இந்தோனேஷியாவில் இந்தத் திட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. அமெரிக்காவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டதற்கு காரணமே இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்கள்தான். அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது, இந்தியாவுக்கு மட்டும் பெரிதாகப் பாதிப்பு ஏற்படவில்லை. அதற்கு இரண்டு காரணங்கள்... ஒன்று, நம் நாட்டு மக்களின் பணம் நமது தேசிய வங்கிகளில் இருந்தது. இன்னொன்று சில்லறை வணிகத்தில் பல கோடிப் பேர் இருந்ததால் தொழில் நிலைத்தது. எனவே, எக்காரணம்கொண்டும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கக் கூடாது.''

தேசிகன் அறங்காவலர், கன்ஸ்யூமர் கவுன்சில் ஆஃப் இந்தியா,

''உலகம் முழுவதும் பல நாடுகள் திவால் ஆகி வருகின்றன. பொருளாதார வீழ்ச்சிக்கு பன்னாட்டு நிறுவனங்களான வால்மார்ட், டெஸ்கோ போன்ற நிறுவனங்களே காரணம் என்று தெரியவந்துள்ளது. மேற்கு நாடுகள் எல்லாம் சுதாரித்துக்கொண்டு தங்களது முடிவை மாற்றிக்கொள்ள முனைகின்றன. ஆனால், மத்திய அரசோ அன்னிய முதலீடு என்கிற முதலையிடம் மக்கள் தலையை நுழைக்கிறது.

கோயில் வாசலில் பூ வாங்கி வைத்துக்கொள்ளும் நிலைமை மாறி, சூப்பர் மார்க்கெட்டுக்கு போய் அநியாய விலை கொடுத்துப் பூ வாங்கும் நிலை ஏற்படும். அன்னிய நிறுவனங்கள் நம் நாட்டிலேயே பொருளை உற்பத்தி செய்தால் மட்டுமே, நம் நாட்டுக்கு வருவாய் கிடைக்கும். ஆனால், அவை இங்கே இருக்கும் பொருட்களை அடிமட்ட விலைக்கு வாங்கிப் பதுக்கிவைத்து கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்யும். இதனால் நம் நாட்டுக்கு எந்த லாபமும் இல்லை. இது நம்மைப் பகடைக்காய்களாக்கி அன்னிய நிறுவனங்கள் நடத்தும் சூதாட்டத்துக்கே வழி வகுக்கும்.''

சின்னசாமி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்,

''10 ஏக்கரில் விவசாயம் செய்பவன்கூட சிறு விவசாயிதான். ஏனெனில், உரம், மின்சாரம் உட்பட பல்வேறு பிரச்னைகள் அவனுக்கு இருக்கிறது. அப்படிப் பார்த்தால், தமிழகத்தில் 90 சதவிகிதம் சிறு விவசாயிகள்தான். இனி அன்னிய நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரம் செய்வார்கள்; நல்ல விலை கொடுப்பதாக ஆசை காட்டுவார்கள். அப்படியே நல்ல விலை கொடுக்கவும் செய்வார்கள். இப்படி செய்யும்போது, இதர உள்நாட்டு முதலாளிகள் பராம்பரியத் தொழிலைவிட்டு அழிந்துபோவார்கள். படிப்படியாக மொத்த விவசாயிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்த பின்பு, அன்னிய நிறுவனங்கள் திடீர் என்று கொள்முதல் விலையைக் குறைத்துவிடுவார்கள். விவசாயிகளுக்கு வேறு வழி இருக்காது. அதனால், அடிமாட்டு விலைக்குத்தான் பொருளை விற்க வேண்டும்.

அடுத்த தாக்குதல் இன்னும் அபாயகரமானது. தாங்கள் கொடுக்கும் விதையைத்தான் நட வேண்டும்; நாங்கள் சொல்லும் பயிரைத்தான் வளர்க்க வேண்டும் என்று மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயிகளிடம் திணிப்பார்கள். மத்திய அரசின் இந்த முடிவு விவசாயிகளை நடுத்தெருவுக்குத்தான் கொண்டுவரும். இதனால் நாட்டுக்குத்தான் கேடு!''

- சரோஜ் கண்பத், டி.எல்.சஞ்சீவிகுமார்



காங்கிரஸிலும் எதிர்ப்பு!



எதிர்க் கட்சித் தலைவரான ஜோஷி மட்டுமல்ல ஆளும் காங்கிரஸ் கட்சியிலும் இதற்கு எதிர்ப்பு வந்துள்ளது. இந்த எஃப்.டி.ஐ-யை அனுமதி அளிக்கும் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இது எதிரொலித்​தது. சோனியா காந்தியின் ஆதரவாளர் என்று சொல்லப்படும் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி, ராகுல் காந்திக்கு நெருக்கமான ஜெயராம் ரமேஷ், வீரப்ப மொய்லி, முகில் வாஸ்னிக் போன்ற காங்​கிரஸ் அமைச்சர்களும் தி.மு.க. அமைச்சர் மு.க.அழகிரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமைச்சர் தினேஷ் திரிவேதி போன்றவர்களும் தங்கள் கட்சி சார்பில் இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Thanks Anandha vikadan