Tuesday, February 14, 2012

ஆர்.டி.ஐ.ஆயுதம்...அலறும் அதிகாரிகள்....

''ஓட்டுப் போடுறது மட்டுமே நம்ம ஜனநாயக உரிமை இல்லை. ஓர் இந்தியக் குடிமகனா, நமக்கு நிறையவே உரிமைங்க இருக்கு. அரசாங்கத்தோட உயர் பொறுப்புகள்ல இருக்கறவங்கள நிக்க வெச்சு கேள்வி கேட்கவும், அவங்க தவறு செய்யுறபட்சத்துல தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அந்த உரிமைகளுக்கு வலிமை இருக்கு. அதை நான் சரியா பயன்படுத்திட்டு இருக்கேன்!''

- குரல் உயர்த்திப் பேசவில்லை. இருந்தாலும் தைரியத்தால் நிரம்பி இருந்தன பூமாவின் வார்த்தைகள்!

குழந்தைகள், கணவர் என்று குடும்பம் சுமக்கும் இல்லத்தரசிகளில் ஒருவர்தான் பூமா. ஆனால், அதோடு தன்னை சுருக்கிக் கொள்ளாமல், 'ஆர்.டி.ஐ' எனப்படும் 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்'(RTI - Right to Information Act) மூலம் தனக்கும், தன்னைச் சுற்றி வசிப்பவர்களுக்குமான அடிப்படைத் தேவைகளை பெற்றுத் தரும் பெண் போராளியாகவும் மிளிர்ந்து கொண்டிருக்கிறார்!

''என்னோட பசங்கள ஸ்கூல்ல இருந்து ஈவ்னிங் 4.15-க்கு கூட்டி வருவேன். திரும்பவும் ஆறு மணிக்கு அவங்களோட நானும் யோகா கிளாஸுக்குப் போயிடுவேன். இடைப்பட்ட நேரத்தில் பேசலாமா..?'' என்று நம்முடைய தொலைபேசி அழைப்புக்கு பதில் சொன்னார் பூமா. குறித்த நேரத்தில் சென்னை, அம்பத்தூரில் இருக்கும் அவரது இல்லத்தில் ஆஜரானோம். எளிமையான உடையும், எதார்த்தமான பேச்சுமாக அறிமுகமானார் பூமா!

''ஊத்துக்கோட்டை பக்கத்துல இருக்கற அனந்தேரி கிராமம்தான் என்னோட தாய்பூமி. ப்ளஸ் டூ வரைதான் படிச்சுருக்கேன். என்னோட காதல் கணவர் ஸ்ரீராமன், தனியார் நிறுவனத்தில் ஜி.எம். அவரோட டிரான்ஸ்ஃபர்களால் 14 வருஷமா இந்தியாவோட பல ஸ்டேட்களை, மக்களை, மொழிகளை, கலாசாரங்களைப் பழகியாச்சு. இந்த அனுபவங்கள்தான் இப்பவும் அரசு அதிகாரிகள், காவல்துறைனு யார்கிட்டயும், எந்தத் தயக்கமும் இல்லாம என்னை அணுக வைக்குது'' என்ற பூமா, முதல் முறையாக 'தகவல் அறியும் உரிமைச் சட்ட'த்தை கையில் எடுக்க வைத்த அந்தச் சம்பவத்தைப் பகிர்ந்தார்.

''ரெண்டு வருஷத்துக்கு முன்ன குடும்பத்தோட ஆந்திராவுக்கு டூர் போயிருந்தப்போ, டிரெயின்ல டிக்கெட் புக் செய்திருந்தோம். எங்களோட ஸீட்ல வேற ஆட்கள் உட்கார்ந்திருந்தாங்க. கேட்டா, 'டி.டி.இ-தான் உட்காரச் சொன்னார்’னு சொன்னாங்க. அவர்கிட்ட கேட்டப்ப, 'உங்களுக்கு கன்ஃபார்ம் ஆன ஸீட்ஸ் இது இல்லை’னு சொன்னவர், வேற ஸீட்டையும் தரல. அப்போ என் கணவருக்கும் அவருக்கும் வாக்குவாதம் வலுக்க, அதை நான் என் மொபைல்ல ரெக்கார்ட் செய்தேன்.

வேற வழியில்லாம டிரெயின்ல நின்னுட்டே வந்த நாங்க, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி, ஸ்டேஷன் அதிகாரிகள்கிட்ட நடந்ததைச் சொல்லி, ஆதாரமா எங்க டிக்கெட், மொபைல் ரெக்கார்டை எல்லாம் காட்டி, நடந்த சம்பவத்தை அவங்க கைப்பட எழுதி வாங்கிக்கிட்டோம். டூர் முடிச்சு தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு, நடந்த எல்லா விஷயங்களையும் சரியா குறிப்பிட்டு, ஆர்.டி.ஐ. சட்டப்படி கடிதம் போட்டோம். அந்த டி.டி.இ-க்கு தண்டனையா, அவரோட ஊதிய உயர்வை மூணு வருஷத்துக்கு நிறுத்தி வெச்சுடுச்சு ரயில்வே நிர்வாகம். லஞ்சம் வாங்கிக்கிட்டு, எங்க ஸீட்டை மத்தவங்களுக்கு மாற்றிக் கொடுத்ததோட, அதிகார திமிர்ல பேசின அந்த ஆளுக்கு கிடைச்ச இந்தத் தண்டனையை, ஒரு குடிமகனோட வெற்றியா நாங்க கொண்டாடினோம்...''

- இதில் இருந்துதான் ஆரம்பித்திருக்கிறது பூமாவின் ஆக்கப்பூர்வ முயற்சிகள்.

'இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, சட்டத்து மேல எனக்கிருந்த மரியாதை பல மடங்கு கூடிடுச்சு. என்னோட தைரியம் அதைவிட பல மடங்கு உசந்துடுச்சு. கணவரும் என்னை உற்சாகப்படுத்தினார். என் பசங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்கறதுக்கு தாமதமாயிட்டே இருந்தது. சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு ஆர்.டி.ஐ. சட்டப்படி ஒரு தபால் அனுப்பினேன். ஒரே வாரத்துல பாஸ்போர்ட் வீடு தேடி வந்துடுச்சு.

சமீபத்தில் வீட்டை புதுப்பிச்சோம். எங்க வீட்டுல வேலை பார்த்திட்டிருந்த கார்பென்டர்கள், வேற ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சதும், அங்க போயிட்டாங்க. பலமுறை தொடர்புªகாண்டும் சரியான பதில் இல்லை. 'இதுக்குக் கூடவா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அணுக முடியும்?’னு நீங்க கேட்கலாம். நிச்சயமா. அந்த கார்பென்டர்கள் எனக்குக் கொடுத்திருந்த பில் உள்ளிட்ட ஆவணங்களை வெச்சுக்கிட்டு, கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட்டேன். அங்க அது தாமதமாகவே, இந்த விஷயத்தை ஆர்.டி.ஐ. மூலமா நான் கேள்வி எழுப்பினேன். அதுக்குப் பிறகு ஆர்.டி.ஐ. அதிகாரிகள் கேள்வி கேட்க, உடனடியா வந்து வேலையை முடிச்சுக் கொடுத்தாங்க. 15 வருஷமா இழுத்தடிக்கப்பட்ட எனக்குத் தெரிந்தவரின் நில பட்டா பிரச்னைக் கும் ஆர்.டி.ஐ. மூலமாவே பலன் கிடைச்சுது. இதைஎல்லாம் உறவினர், அக்கம் பக்க நண்பர்கள்னு எல்லார்கிட்டயும் பகிர்ந்து, அவங்களுக்கும் ஆர்.டி.ஐ. நம்பிக்கையை கொடுத்துட்டிருக்கேன்'' என்ற பூமா, தொடர்ந்து சமூகப் பிரச்னைகளையும் ஆர்.டி.ஐ. மூலம் எதிர்கொண்டு வருகிறார்.

தெரு பராமரிப்பு, சாக்கடை, கிளை அஞ்சலகம்... என அடுத்தடுத்து பூமா அதிரடி ஆக்ஷன்களில் இறங்க, பகுதி மக்களும் அவருடன் கைகோத்துள்ளனர்.

''ஆரம்பத்துல பொதுப் பிரச்னைக்கான பெட்டி ஷன்கள்ல கையெழுத்துப் போடவே பலரும் தயங்கினாங்க. ஆனா, ஒவ்வொரு படியா வேலைகள் நடக்கறதைப் பார்த்துட்டு, 'ஆளும்பேருமா இறங்குவோம் வாங்க...’னு பலரும் இணைய ஆரம்பிச்சுருக்காங்க'' என்று சொல்லும்போதே, பெருமிதம் அந்த முன்னோடியின் முகத்தில்.

''பாதாள சாக்கடை, குப்பை கான்ட்ராக்ட், மருத்துவமனை குறைபாடுகள்னு எந்தப் பிரச்னையா இருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்கிட்ட முறையிடுங்க. ரியாக்ஷன் இல்லைனா, அந்தப் பிரச்னை பற்றி நமக்குத் தெரிய வேண்டிய விவரங்களை கேள்விகளா எழுதி, 10 ரூபாய்க்கான 'நீதிமன்ற முத்திரை வில்லை' (Court Fee Stamp) ஒட்டி, பக்கத்துல இருக்கற தகவல் அறியும் உரிமைச் சட்ட அலுவலகத்துக்கு அனுப்புங்க. அடுத்த 30 நாட்களுக்குள்ள சரியான காரணங்களோட அவங்க பதில் அனுப்பி வைப்பாங்க. விடாம ஃபாலோ பண்ணுங்க. தவறு செய்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவே இருந்தாலும் உரிய தண்டனை கிடைக்கும்!'' என்று எனர்ஜி கொடுத்த பூமா, தன் குழந்தைகள் ஸ்ரீஷ், ஸ்ரீவத்ஷன் இருவரையும் யோகா வகுப்புக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார்!

வாழ்த்துகள் போராளியே !

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு சில குறிப்புகள்...

முதலில், நீங்கள் எதுதொடர்பாக புகார் செய்ய விரும்புகிறீர்களோ... அதை உரிய அலுவலகங்களுக்கு முறைப்படி புகார் மனுவாக அளிக்க வேண்டும் (உதாரணத்துக்கு, சென்னையில் குப்பைகள் அள்ளப்படவில்லை என்றால், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிக்கு புகார் அனுப்ப வேண்டும்).

உங்கள் புகார் மனுவுக்கு உரிய பதில் இல்லை என்றால்தான், 'பொதுத் தகவல் அதிகாரி'யை தொடர்பு கொள்ள வேண்டும் (ஒவ்வொரு அரசு அலுவலகத்திலுமே இப்படி ஒரு அதிகாரி இருப்பார்). ஏற்கெனவே நீங்கள் செய்த புகாரின் நகல்களுடன், பத்து ரூபாய் மதிப்பிலான நீதிமன்ற முத்திரை வில்லை ஒன்றை புகாரின் முதல் பக்கத்தில் ஒட்டி அனுப்பினால் போதும்.

இதற்கான பதில் முப்பது நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்றால், அடுத்தாக 'மேல்முறையீட்டு அதிகாரி'க்கு, புகாரை அனுப்பலாம். அதற்கும் பதில் கிடைக்க தாமதமானால் 'இன்ஃபர்மேஷன் கமிஷனர்' (தமிழ்நாடு - சென்னை) அலுவலகத்துக்கு அனுப்பலாம். இந்த நடைமுறைகளில் ஏதாவது ஓர் இடத்திலேயே உரிய தகவல் கிடைத்துவிடும். நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடும்.

முதல் தடவை பொதுத் தகவல் அதிகாரிக்கு மனு செய்யும்போது மட்டும் நீதிமன்ற முத்திரை வில்லை ஒட்டினால் போதும். ஒவ்வொரு முறை அனுப்பும் கடிதங்களின் நகல் மற்றும் அனுப்பியதற்கான அத்தாட்சி ஆகியவற்றை நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடிதங்களை பதிவுத் தபாலில் அனுப்புவது நல்லது. -- Anantha vikadan

No comments: